ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 142 முகாம்கள் நடத்த திட்டம்- ஆட்சியர்

 

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (டிச.13) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "தமிழக முதலமைச்சரால் மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக வருகின்ற டிசம்பர் 18 முதல் ஜனவரி 06 வரை 16 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 60 முகாம்களும், நகராட்சிப் பகுதிகளில் 33 முகாம்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 31 முகாம்களும், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 18 முகாம்களும் என மொத்தம் 142 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின் இணைப்புகள், மின்இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பட்டா மாறுதல், இணைவழி பட்டா, நில அளவீடு, வாரிசுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை வழங்கவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மற்றும் ஊரசு வளர்ச்சித்துறையின் சார்பில் கட்டுமான வரைபட ஒப்புதல், குடிநீர் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளும், காவல்துறையின் சார்பில் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக புகார்கள் மற்றும் நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பான மனுக்கள் இம்முகாம்களில் பெறப்படவுள்ளது.

 

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பராமரிப்பு உதவித் தொகை வழங்கவும், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் போன்ற குறிப்பிட்ட துறைகளில் தொடர்புடைய சேவைகள் இம்முகாமில் பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.

 

இம்முகாம்களில் கலந்துகொள்பவர்கள் தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவு செய்ய ஏதுவாக அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். மேலும், இம்முகாம்களில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் டோக்கன் வழங்கப்பட்டு மனுக்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முகாமில் மாவட்ட நிலை அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.