ட்ரெண்டிங்

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! 

மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024- 2025ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்படப்படவுள்ளது.

இதில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 12 முதல் 19 வயது வரை தடகளம், இறகுபந்து, கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைபந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம். கோ- கோ உள்ளிட்ட 15 விளையாட்டுக்களும், மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 12 முதல் 19 வயது வரை டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து, வாள் விளையாட்டு. ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட 6 விளையாட்டுக்களும், நேரடி மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 12 முதல் 19 வயது வரை சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட 2 விளையாட்டுக்களும் நடத்தப்பட உள்ளது.

மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள் 17 முதல் 25 வயது வரை தடகளம், இறகுப்பந்து, கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசை பந்து, கையுந்து பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட 14 விளையாட்டுக்களும், மண்டல அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் 17 முதல் 25 வயது வரை டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை பந்து கையுந்துபந்து, வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட 6 விளையாட்டுக்களும், நேரடி மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் 17 முதல் 25 வயது வரை சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட 2 விளையாட்டுக்களும் நடத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள், பெண்களில் உடல் ஊனமுற்றோருக்கு தடகளம், இறகுப்பந்து, சக்கர நாற்காலி மேசைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களும், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், கையுந்துபந்து 7 வீரர்கள், மனவளர்ச்சி குன்றியோருக்கு தடகளம், எறிபந்து 7 வீரர்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், கபாடி 7 வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டுக்களும் நடத்தப்பட உள்ளது.

நேரடி மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள், பெண்களில் பெருமூளை வாதமுடையோருக்கு தடகளம் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களும், பொதுப்பிரிவு 15 முதல் 35 வயது வரை ஆண்கள், பெண்களில் தடகளம், மட்டைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, கேரம். சிலம்பம், இறகுப்பந்து, கபாடி உள்ளிட்ட 8 விளையாட்டுக்களும், அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள், பெண்களில் தடகளம், சதுரங்கம். கபாடி. கையுந்துபந்து, இறகுப்பந்து, கேரம் உள்ளிட்ட 6 விளையாட்டுக்களும் நடத்தப்படவுள்ளது.

இவ்விளையாட்டுப்போட்டிகளில் ஒரு விளையாட்டு வீரர் ஒரே ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். தனிநபர் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு விளையாட்டு வீரர் இரண்டு பிரிவுகளில் பங்கேற்க முடியும். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

2024- ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அனைத்து நடைமுறைகள் மற்றும் விதிகளையும் பின்பற்றி பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.