ட்ரெண்டிங்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்! 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் தொடர்புடைய விவசாயிகளுக்கு அஞ்சல் மூலம் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்து நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணாத மனுக்களின் மீது அலுவலர்கள் பதில் அளிக்காததன் காரணம் குறித்து கேட்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையகங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 5,566 மெட்ரிக் டன்னும், டிஏபி 1,212 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,552 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 16,974
மெட்ரிக் டன்னும் என மொத்தம் 25,304 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆடி பட்டத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் 172.671 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 24.912 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும், 34.023 மெட்ரிக் டன் விதை பயறு வகைகளும், 47.354 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 1,004.4 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஜூலை 2024 வரை 334.1 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, ஜூன் மாதம் முடிய 48,287.7 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, விவசாயிகளுக்குத் தேவையான இடங்களில் உலர்கலன் அமைத்துத் தர தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி. மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மாமரம் கவாத்து செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று, ஆடிப் பட்டம் காய்கறி சாகுபடி குறித்த கருத்துக் காட்சி மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள். சிறுதானியங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.