கேரளா மற்றும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் கர்நாடகா அணைகளான கபினி, கிருஷ்ணராஜர் சாகர் போன்ற அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரித்து வந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை 16- ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
கடந்த ஜூலை 16- ஆம் தேதி அன்று 44.62 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென அதிகரித்து 9 நாட்களில் நீர்மட்டம் 46.18 அடி உயர்ந்து இன்று 90 அடியை எட்டியது. மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28,856 கனஅடியாகவும், நீர் இருப்பு 52.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 391 நாட்களுக்குப் பிறகு 90 அடியை எட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


