ட்ரெண்டிங்

தமிழ்ச் செம்மல் விருது- தமிழ் ஆர்வலர்களுக்கு அழைப்பு! 

சேலம் மாவட்டத்தில் தமிழ்ச் செம்மல் விருது பெறுவதற்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி. ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் விருது 2015- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 2024- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக, தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது எனவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது தன் விவரக் குறிப்பு, வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகலுடன், இரண்டு நிழற்படங்கள் மற்றும் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.