சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்டோர் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். குழந்தைகளை கவரும் வகையில் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் குகை போன்ற பிரம்மாண்ட செட்டும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், இன்று (ஜூலை 22) பிற்பகல் 02.00 மணியளவில் பூங்காவில் இருந்த செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வானில் கரும்புகை சூழ, அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர். எனினும், செட் முழுவதும் எரிந்து நாசமானது. பூங்காவில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தீ விபத்து நிகழ்ந்த பள்ளப்பட்டி ஏரிக்கு விரைந்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



