தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் 19 புதிய பேருந்துகளை இன்று (ஜூலை 21) மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு பழைய பேருந்துகளை மாற்றம் செய்து அதற்கு பதிலாக நவீன புதிய (BS-6) பேருந்துகளாக இயக்க தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் மகளிர் பயனடையும் வகையிலான புதிய பேருந்து சேவைகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து, சேலம் புதிய பேருந்து நிலையம், 5 ரோடு, ஜங்சன், மாமாங்கம், ஓமலூர் வழியாக சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்றடையும் வகையில் புதிய வழித்தடத்தில் 2 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வழித்தடத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விமானத்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கு சென்று வர இந்நேரடி பேருந்து சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தற்சமயம் இயங்கி கொண்டிருக்கும் புறநகர் வழித்தட பேருந்துகளுக்கு பதிலாக 17 எண்ணிக்கையிலான நவீன புதிய (BS-6) புறநகர பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாதாவரம் (சென்னை)-க்கு 8 பேருந்துகளும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரத்திற்கு 3 பேருந்துகளும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு 3 புதிய பேருந்துகளும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு 3 பேருந்துகளும் என 17 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்றைய தினம் புதிய வழித்தடம் மற்றும் 19 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)