ட்ரெண்டிங்

மேட்டூர் அணையில் ஆட்சியர் நேரில் ஆய்வு! 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து கனமழை காரணமாக, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை பகுதியில் வண்டல் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 20) மாலை 04.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 65,052 கனஅடியில் இருந்து 68,843 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 63.83. அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 27.62 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 68,000 கனஅடியைத் தாண்டிய நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், அணைக்கான நீர்வரத்து, இருப்பு குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.