தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலம் மாவட்டம், பெருமாக்கவுண்டம்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவி ராவணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சேலம் இளம்பிள்ளை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வம்- சிவரஞ்சனி தம்பதியின் மகள் ராவணி அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளார். 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர் இயற்பியல், கணிதப் பாடத்தில் தலா 100 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியில் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 இடஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவி ராவணி 199.50 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முதலிடம் பிடித்த மாணவியை சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி நேரில் அழைத்து அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு அப்துல் கலாம் அவர்களின் புத்தகத்தை வழங்கினார்.



