கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டம், செவ்வாய்பேட்டைப் பகுதியின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 08) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது.
இதில், கட்சியின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சூர்யா வெற்றிக் கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி, "திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை என்றால், தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும்; பட்டைப் போட்டவன் எல்லாம் இந்து அல்ல; உண்மையான இந்துக்கள் நாங்கள் தான். பா.ஜ.க.விற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிட்டன; இன்னும் ஆறு மாதம் தான் மோடியின் ஆட்சி இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

