ட்ரெண்டிங்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமல்! 

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவைக்கு பதில் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுராக்ஷ, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. கடந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம். புதிய சட்டங்கள் பற்றி போலீசார், நீதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்துறை மும்முரம் காட்டி வருகிறது. 

புதிதாக கொண்டு வரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டத்தில் தேசத்துரோகம் என்பது நீக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை தரும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், கும்பலாக அடித்துக் கொலை செய்வதற்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டம் 2023 கொண்டு வரப்பட்டது. புதிய சட்டத்தின் படி கால வரையறைக்குள் விசாரணை, வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாகப் பதிவுச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.