ட்ரெண்டிங்

வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுச் செய்த ஆட்சியர்! 

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூபாய் 152 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஜூன் 25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்விற்கு பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசால் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றையதினம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக் குழு உள்ளிட்ட ரூபாய் 152 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 3,280 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடப் பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 8.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 9.99 லட்சம் மதிப்பீட்டில் முத்தம்பட்டி ஊராட்சி, சங்கர் தோட்டம் அருகே அமைக்கப்பட்டு வரும் கசிவுநீர் குட்டை பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 6.63 லட்சம் மதிப்பீட்டில் முத்தம்பட்டி சமத்துவ இடுகாட்டிற்கு அணுகுசாலை மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்கும் பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அத்தனூர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூபாய் 3.90 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, துக்கியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 32.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 புதிய வகுப்பறைகளும், 15- வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 31.43 லட்சம் மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ள பணிகளும். ரூபாய் 890 லட்சம் மதிப்பீட்டில் பொன்னுசாமி தோட்டம் அருகே அமைக்கப்பட்டு வரும் கசிவுநீர் குட்டை பணியும், 15- வது நிதிக்குழுவின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூபாய் 8.90 லட்சம் மதிப்பீட்டில் சிறிய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.