ஆன்மிகம்

குகை மாரியம்மன் கோயில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சேலம் மாநகரில் பிரசித்திப் பெற்ற குகை மாரியம்மன் கோயிலின் ஆடித்திருவிழாவையொட்டி, கண்கவர் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கானோர் ஓரிடத்தில் திரண்டக் கழுகுப் பார்வைக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

சேலத்தில் ஆடி மாதம் மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித் திருவிழாவை முன்னிட்டு, குகை மாரியம்மன் கோயிலில் உலக புகழ்பெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடவுள்கள் வேடமணிந்து வந்த பக்தர்கள், இதிகாசக் கதைகளில் வரும் காட்சிகளைத் தத்ரூபமாகச் சித்தரித்தனர். குறிப்பாக, சிறுவர்கள் முருகன் வேடமிட்டு, கையில் வேலுடன் மக்கள் மத்தியில் உலா வந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. 

மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் கடவுள் வேடமணிந்து ஊர்வலமாக வந்தவர்களை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர். பிரசித்திப் பெற்ற இந்த வண்டி வேடிக்கையைக் காண சேலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் குகை பகுதியில் குவிந்தனர். மின்னொளியில் ஒரே வீதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வலம் வந்த காட்சி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியுள்ளது. 

அதேபோல், குகை பகுதிகளில் இருந்த உணவகங்கள், பானிபூரி கடைகள், தட்டு வடை செட் கடைகள், பாஸ்ட்புட் உள்ளிட்ட கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியதை நம்மால் காண முடிந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு அதிக லாபம் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.