ட்ரெண்டிங்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சூடுபிடித்து ஆடுகள் விற்பனை! 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியுள்ளது.  

கோவை மாவட்டம், அன்னூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் காலை 05.00 மணி முதலே ஆடுகளின் விற்பனை சூடுபிடித்தது. ஈரோடு, நீலகிரி, திருப்பூரில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரண்ட வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். அங்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. 

பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு விற்பனைக்காக 900- க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. 10 கிலோ கொண்ட ஒரு ஆடு ரூபாய் 4,500- க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நடந்த ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்க, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் குவிந்தனர். அங்கு சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.