ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் தங்க நகை திருட்டு!

சேலம் கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சேலம் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 51) என்பவர் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்த சரஸ்வதி எதார்த்தமாக தனது கழுத்தைப் பார்த்துள்ளார். மூன்று பவுன் தங்க நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அதைத் தொடர்ந்து, சரஸ்வதி சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தங்க நகைகளை பறித்துச் சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை அவ்வப்போது பார்த்துக் கண்காணிக்குமாறும், இல்லையென்றால் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர், அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.