ட்ரெண்டிங்

சபாநாயகர் பதவி- போட்டி போடும் கட்சிகள்! 

பா.ஜ.க. கூட்டணி அரசில் சபாநாயகர் பதவியைப் பெற நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடந்து முடிந்த 18- வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மைக் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. 

குறிப்பாக, சந்திரபாபு நாயுடு வசம் 16 எம்.பி.க்களும், முதலமைச்சர் நிதிஷ்குமார் வசம் 12 எம்.பி.க்களும் உள்ளதால் கேபினட் மற்றும் இணையமைச்சர் பதவி மட்டுமின்றி, முக்கிய இலாக்காக்கள், பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி பா.ஜ.க. தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரம் மிக்க பதவிகளில் சபாநாயகர் பதவியும் ஒன்று. மக்களவைத் தலைவரே பேரவையை நடத்துபவர், கண்காணிப்பவர், அவையின் அலுவல்களைக் கவனிப்பவர். தீர்மானங்களை சபாநாயகர் அனுமதியின்றி பேரவையில் தாக்கல் செய்ய முடியாது. சபாநாயகரின் இசைவு அடிப்படையில் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன, தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

இந்த முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியைப் பெற நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.