ட்ரெண்டிங்

சிறை அதாலத் மூலம் 26 வழக்குகளுக்கு தீர்வு! 

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படியும், சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி சுமதியின் வழிகாட்டுதல்படியும் நேற்று (ஆகஸ்ட் 26) சேலம் மத்திய சிறையில் "சிறை அதாலத்" (Prison Adalat) நடைபெற்றது.

சிறை அதாலத்தின் துவக்க விழாவில், சேலம் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் வினோத் வரவேற்புரையும், சேலம் மத்திய சிறையின் மன நல ஆலோசகர் செல்வக்குமார் சிறப்புரையும் ஆற்றினார்கள். இந்த துவக்க விழாவின் முக்கிய நிகழ்வாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் இளந்திரையன் தலைமையுரையாற்றுகையில், “சிறைவாசிகள் அனைவரும் சிறையில் உள்ள காலகட்டத்தில் தங்களது அறிவை விரிவு செய்யும் வகையில் கல்வியிலும், சிறை நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு தொழில்களையும் கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.

இந்த துவக்க விழாவில் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சட்டப்பணிகள் ஆணைகுழுவின் சார்பு நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், சேலம் மாவட்ட துணை காவல் ஆணையாளர், நீதித்துறை மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சிறையில் உள்ள பட்டம் செயல்திட்டத்தின் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொடக்க விழாவிற்கு பின்னர், சமரசம் செய்துக் கொள்ள கூடிய குற்ற வழக்குகளை பரிசீலனை செய்து, சிறைவாசிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கும் பொருட்டு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தின், முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி சிறை அதாலத்தை நடத்தினார். 

இதில் 25 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஓமலூர் கிளைச்சிறையில் நீதித்துறை நடுவர் ஷர்மிளா நடத்திய சிறை அதாலத்தில் ஒரு வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. 


மேலும், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள சிறைகளில் நடத்திய சிறை அதாலத் மூலம் மொத்தம் 26 வழக்குக்களுக்கு தீர்வு காணப்பட்டது.