ட்ரெண்டிங்

சேர்வராயன் குகை கோயில் தேரோட்டம் கோலாகலம்! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உயரமான பகுதியில் சேர்வராயன் குகை கோயில் அமைந்துள்ளது. ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் இந்த குகை கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாகத் திகழ்கிறது. 

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் சிறப்பான முறையில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்தாண்டுக்கான கோயில் தேரோட்டம்  இன்று (மே 28) கோலாகலமாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராயப்பெருமாள், காவிரியம்மாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் ஏற்காட்டை சுற்றியுள்ள 72 கிராமங்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபட்டனர். 

தேர் வரும் வழியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். சேர்வராயன் கோயில் தேரோட்டத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோயிலுக்கு பேருந்துகள்  இயக்கப்பட்டன.

ஏற்காட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா என்பதால் ஏற்காடு ஆய்வாளர் நாகராஜ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி ஆகியோர் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.