ட்ரெண்டிங்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி!


சேலம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர் எழுத்தாளர்களை நினைவுக் கூறும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் "தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக பாவலரேறு பெருஞ்சித்திரனார். கவிஞர் தமிழ்நாடன் மற்றும் கவிஞர் முருகுசுந்தரம் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், கவிஞர் தமிழ்நாடன் மற்றும் கவிஞர் முருகுசுந்தரம் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுக் கூரும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் ஜனவரி 31- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூபாய் 5,000, இரண்டாம் பரிசு ரூபாய் 3,000, மூன்றாம் பரிசு ரூபாய் 2,000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். பரிந்துரையின்றி வருவோர், தாமதமாக வருவோர் போட்டியில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பாவலரேறுவின் எழுத்துப் பணிகள், கவிஞர் தமிழ்நாடனின் படைப்புகள், கவிஞர்முருகுசுந்தரமும் பாவேந்தரும் என்ற தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கும், தமிழ்த்தேசியத்தின் தந்தை கவிஞர் தமிழ்நாடனின் இலக்கியம் மற்றும் கலைப்பயணம், கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைக் கோட்பாடுகள் என்ற தலைப்புகளில் கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.