ட்ரெண்டிங்

லாரி, இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதியை அடுத்த திருவள்ளுர் சாலையில் வசித்து வருபவர் குமார். இவர் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீபன்கர் (வயது 23) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில், ஆகஸ்ட் 19- ஆம் தேதி மாலை தீபன்கர் சித்தனூரில் உள்ள தனது நண்பர் வீட்டு திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் திருமண விழாவை முடித்துக் கொண்டு, இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது, ரெட்டிப்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக பால் ஏற்றி வந்துக் கொண்டிருந்த லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தீபன்கர் கீழே விழுந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சாலையில் சென்றவர்கள், தீபன்கரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் தீபன்கரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இது குறித்து தகவலறிந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர், வழக்குப்பதிவு லாரியின் ஓட்டுநர் சுபாஷ (வயது 25) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தீபன்கர், தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. அருணின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.