ட்ரெண்டிங்

ஏற்காடு கோடை விழா- ஆட்சியர் நேரில் ஆய்வு! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47-ல் கோடை விழா விரைவில் தொடங்கவுள்ளதையொட்டி, ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இன்று (மே 09) நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடைகால மலைப்பிரதேச சுற்றுலாத் தளங்களின் வரிசையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் இடமாக ஏற்காடு திகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏற்காடு கோடை விழா நடத்தப்படுவதால் பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கோடை காலத்தைக் கொண்டாடிட ஏற்காடு மலைப்பகுதிக்கு வருகை தருகின்றனர். 

குறிப்பாக, ஏற்காடு, அண்ணா பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு மலர்க்காட்சியும், காய்கறி கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிகள் அமைக்கப்படும். அந்த வகையில், ஏற்காடு கோடை விழா தொடங்குவது
குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இக்கோடை விழாவில் ஓவியங்கள் உள்ளிட்ட அறிய புகைப்படக் கண்காட்சி, நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டது. அந்தவகையில், படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, போதிய அளவிலான குடிநீர் வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், குப்பை தொட்டிகள், கழிப்பிட வசதிகள் முறையாக அமைக்கபட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஏற்காடு மலைப் பாதையில் சாலை பாதுகாப்புகள் குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் விழிப்புணர்வு பதாகைகள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்குவதில் அனுபவம் உடையவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

எனவே, ஏற்காடு கோடை விழாவிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாகப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.