தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி செல்ஸியசிற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றியும், வறண்ட நிலையிலும் காணப்பட்டன. கடுமையான வறட்சியும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் சார்பில் இஸ்லாமியர்கள், சேலம் கோட்டை பகுதியில் திறந்தவெளியில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் 100- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பல்வேறு ஆன்மீக தலங்களிலும் மழை வர வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன.


