ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

சேலம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஜன.08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது .

 

இதன் காரணமாக, இன்று (ஜன.08) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர் நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

 

இன்று முதல் ஜனவரி 10- ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.