ஆன்மிகம்

சேலத்தில் ஆடித் திருவிழா கோலாகலம்!

சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் ஜூலை மாதம் 17- ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 07)  இரவு 08.30 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி கிச்சிப்பாளையத்தில் உள்ள நடராஜர் பஜனை மட பக்த ஜன சங்கத்தில் இருந்து தொடங்கியது. அதன்படி முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மேளம், தாளங்கள் முழங்க வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுகிறது. பெண்கள் பொங்கல் வைப்பதற்கு ஏதுவாக கோயில் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதுகாப்புப்  பணிகளில் 100- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆடித் திருவிழாவை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 09) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாநகரில் உள்ள அம்மாப்பேட்டை, சூரமங்கலம், வலசையூர், காமராஜர் நகர் காலனி, சத்யா நகர், செவ்வாய்பேட்டை, குகை, கொண்டலாம்பட்டி, நெத்திமேடு, பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் ஆடித் திருவிழா களைக்கட்டியுள்ளது. கோட்டை மாரியம்மன் கோயிலைப் பின்பற்றி, இந்த கோயில்களில் பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். 

ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா என்றால் அது ஆடித்திருவிழா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.