ட்ரெண்டிங்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 35). இவர் நேற்று (ஆகஸ்ட் 07) தனது குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். 

பின்னர், ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நின்றுக் கொண்டு தனது குழந்தைகளுடன் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள், ரேஷ்மாவைத் தடுத்து நிறுத்தினர். 

அத்துடன், ரேஷ்மாவையும், அவரது குழந்தைகளையும் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினர், விசாரணை நடத்தினர். 

 இது குறித்து ரேஷ்மா கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன். எங்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக எனது மாமியாரும், கணவரின் சகோதரியும் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.