ட்ரெண்டிங்

"அண்ணாவுக்குப் பிறகு அவரை முதலமைச்சராக முன்மொழிந்த எம்.ஜி.ஆர்."- கருணாநிதி குறித்து ஆவணப்பட இ

கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையத்தின் சார்பில், கலைஞர் நினைவுப் பொழிவரங்கம் இன்று (ஆகஸ்ட் 07) காலை 11.00 மணிக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் இரா.சுப்பிரமணி வரவேற்புரையாற்றினார்.  

நிகழ்ச்சியில் ஆவணப்பட இயக்குநர் சாரோன், திரை இலக்கிய வானில் கலைஞர் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தங்களுக்கு முன்பு வைக்கப்படும் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க விருப்பமில்லாத இளைய தலைமுறை உருவாகி வருகிறது. இச்சூழல் வருத்தம் அளிக்கிறது. புத்தக வாசிப்பினை இளைஞர்கள் முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கலைஞருடன் இருந்த முக்கியத் தலைவர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள். எனினும் அண்ணாவுக்குப் பிறகு அவரை முதலமைச்சராக எம்.ஜி.ஆர். முன்மொழிந்தார். 

18 வயதில் எழுதத் தொடங்கிய கலைஞர், 20 வயதில் பெரியாரிடம் குடியரசு பத்திரிகையில் பணியாற்றினார். மேலும் நாடகத்திற்கான கதை எழுதுவதிலும் ஆர்வமாக இருந்தார். ஒரே வாரத்தில் தூக்குமேடை என்ற நாடகத்தை எம்.ஆர்.ராதா கேட்டதின் பேரில் எழுதினார். அந்த நாடகத்தில் கதாநாயகனாக கலைஞரும், வில்லனாக எம்.ஆர்.ராதாவும் நடித்தனர். ஒத்திகையில் இல்லாத வசனங்களை எம்.ஆர்.ராதா கேள்வியாக கேட்டபோது, அதற்கு சளைக்காமல் பதிலளித்த கலைஞரின் திறமையை பார்த்து “கலைஞர்” என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதா வழங்கினார்.

அபிமன்யூ திரைப்படத்தில் வசனம் எழுதிய நிலையில், அவருடைய பெயர் இடம்பெறாததால் மனம் தளரவில்லை. மறுக்கப்பட்ட இடத்திலேயே தவிர்க்க முடியாத நபராக மாறியது கலைஞரின் சாதனை.1949- ஆம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு கதை மற்றும் வசனம் எழுத டி.ஆர்.சுந்தரம் அழைப்பின் பேரில் கலைஞர் வந்தார். மந்திரிகுமாரி திரைபபடத்தில் கதை மற்றும் வசனம் எழுத வாய்ப்பு வந்தபோது, அதில் கதாநாயகனாக எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கலைஞர் கேட்டு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். 


இந்தப் படத்திற்கு பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்த மணமகள் படத்தின் சிறப்பான பணிக்காக கலைஞருக்கு கார் வாங்கி கொடுத்தார். இதனையடுத்து மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதினார். இவ்வளவு சிறப்புக்கு பின்னரே கலைஞரின் பெயரை எம்.ஜி.ஆர் முதல்வராக முன்மொழிந்தார்.

 பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னபோது, அவரே இருக்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார். 1952- ஆம் ஆண்டு பராசக்தி படம் வெளிவந்தது. அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ஒரே நாளில் சிவாஜி உச்சத்திற்கு சென்றார். சமூகத்தின் கொடுமைகளை பராசக்தி படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை வசனமாக கலைஞர் முன்வைத்தார். கை ரிக்சா கொடுமையை விமர்சித்த நிலையில் ஆட்சிக்கு வந்து முதலமைச்சரானதும் கலைஞர் அந்த முறையை ஒழித்தார். சுயமரியாதை திருமணம் குறித்த முன்னெடுப்பும் பராசக்தியில் வசனமாக வந்திருந்தது. 

மரத்தடியில் இருப்பவர்கள் மாளிகைக்கு வர வேண்டும் என்று 1952- ஆம் ஆண்டு வசனம் எழுதியவர் குடிசை மாற்று வாரியம் தொடங்கி சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற இருபெரும் கதாநாயகர்களை தமிழ்ச் சமூகத்தில் கொண்டு சேர்த்த பெருமை கலைஞரையே சேரும். 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் மற்ற எழுத்துப் பணிகளையும் அயராமல் மேற்கொண்டார். அரசியலில் ஏற்பட்ட மனச்சோர்வை தன்னுடைய எழுத்துப்பணியால் போக்கிக் கொண்டார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வைத்து, தனக்கு கிடைக்காத வாய்ப்புகளை மற்றவர்களுக்கு உருவாக்கி கொடுத்த பெருமை கலைஞரையே சேரும்". இவ்வாறு ஆவணப்பட இயக்குநர் சாரோன் தெரிவித்துள்ளார்.