ட்ரெண்டிங்

பியூட்டி பார்லரில் தங்க நகைகள் மாயம்- காவல்துறையினர் விசாரணை!

சேலம் மாநகரில் அம்மாப்பேட்டையின் குமரன் நகரைச் சேர்ந்தவர் கவிதா (வயது 41). இவர் பட்டைக்கோவில் அருகே உள்ள சேர்மன் ராமலிங்கம் தெருவில் பியூட்டி பார்லர் கடையை நடத்தி வருகிறார். 

கவிதா தனது வீட்டில் தங்க நகைகளை வைத்திருந்தால், பாதுகாப்பாக இருக்காது என எண்ணி, தனது 41 பவுன் தங்க நகைகளை பியூட்டி பார்லரில் உள்ள பீரோவில் வைத்துப் பூட்டியுள்ளார். அத்துடன், அவ்வப்போது பீரோவில் வைக்கப்பட்டுள்ள நகைகளைத் திறந்து பார்த்து கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு  பீரோவைத் திறந்து பார்த்தபோது, 24 தங்கநகைகள் மட்டும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து, அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற கவிதா, தங்க நகைகள் மாயமானது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? நகைகள் எப்படி மாயமானது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தங்க நகைகள் மாயமானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.