ட்ரெண்டிங்

தி.மு.க. மாநாடு- காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு!

 

நாளை (ஜன.21) சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இன்று (ஜன.20) மாலையே சேலம் மாவட்டத்திற்கு வருகைத் தரவுள்ளனர்.

 

மாநாட்டையொட்டி, மாநாடு நடைபெறும் திடலில் சேலம் மட்டுமின்றி தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் என மொத்தம் 8,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கு வரும் லாரிகள், ஆம்னி பேருந்துகள் மாற்றுப்பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.