ட்ரெண்டிங்

வாக்குப்பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்! 


2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. நேரில் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம் அமைக்கப்பட்டு வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும், அதற்கான வசதிகளை எற்படுத்தவும், இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், வாக்காளர்களுக்கு இதன்மூலம் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகிறது.

அதேபோன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs & VVPATs) மூலம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க வாகனம் (Mobile Demonstration Van) மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணவு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வின் போது, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.