ட்ரெண்டிங்

சேலத்தில் 11.29 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு!

 

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாநகராட்சி பகுதிகளில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும் மற்றும் தொடங்கப்பட உள்ள பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

 

சூரமங்கலம் மண்டலத்தில் 28- வது வார்டில் புதியதாக ரூபாய் 95.00 லட்சம் மதிப்பில் நுண்ணூயிறி உரம் தயாரிக்கும் மையம், புதியதாக ரூபாய் 60.00 லட்சம் மதிப்பில் ஆண் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மையம் கட்டிடமும், 3- வது வார்டில் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூபாய் 72.00 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 14- வது வார்டில் ரூபாய் 26.94 லட்சம் மதிப்பில் ஆயுதப்படை மைதானம் அருகில் சுகாதார வளாகம் கட்டிடமும், 6- வது வார்டில் ரூபாய் 163.00 லட்சம் மதிப்பில் முல்லை கார்டன் ஓடை புதிப்பிக்கும் பணிகளும், ரூபாய் 85.00 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பொருள் மீட்பு வசதி மையம் பணிகளும், ரூபாய் 36.28 லட்சம் மதிப்பில் காந்தி நகரில் சுகாதார வளாகம் கட்டிடம் கட்டும் பணிகளும், 15- வது வார்டில் ரூபாய் 96.00 லட்சம் மதிப்பில் அய்யர் தோட்டம் பாலம் புதிப்பிக்கும் பணிகளும், 12- வது வார்டில் ரூபாய் 85.00 லட்சம் மதிப்பில் காக்கயன் இடுகாடு வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை பொருள் மீட்பு வசதி மையம் பணிகளும், ரூபாய் 33.00 லட்சம் மதிப்பில் வார்டு அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிகளும், 14- வது வார்டில் ரூபாய் 33.00 லட்சம் மதிப்பில் ஆயுதப்படை மைதானம் அருகில் வார்டு அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிகளும், அம்மாப்பேட்டை மண்டலம் 42- வது வார்டில் ரூபாய் 54.00 லட்சம் மதிப்பில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் கூடுதல் கட்டிட பணிகளும், 37- வது வார்டில் ரூபாய் 49.00 லட்சம் மதிப்பில் காமராஜர் காலனி மாநகராட்சி துவக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகள், கொண்டலாம்பட்டி மண்டலம் 46- வது வார்டில் ரூபாய் 79.35 லட்சம் மதிப்பில் குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 6 வகுப்பறை கட்டிடப் பணிகளும், 47- வது வார்டில் ரூபாய் 21.00 லட்சம் மதிப்பில் அம்பேத்கர் தெருவில் சமுதாய கூடத்திற்கு முதல் தளம் அமைக்கும் பணிகளும், 60- வது வார்டில் ரூபாய் 99.00 லட்சம் மதிப்பில் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் கட்டிடப் பணிகளும், 57- வது வார்டில் ரூபாய் 40.00 லட்சம் மதிப்பில் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டிடங்கள் என மொத்தம் 17 முடிவுற்ற பணிகளை ரூபாய் 11 கோடியே 29 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.