ட்ரெண்டிங்

தென் ஆப்பிரிக்காவில் விஷ வாயு கசிவு: 16 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் கிழக்கில் விஷ வாயு கசிவில் 16 பேர் பலியாகி உள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள்.

இதுகுறித்து கவுடெங் லிசுஃபி மாகாண முதல்வர் கூறும்போது, “தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கில் போக்ஸ்பர்க் மாவட்டததின் அருகில் நேற்றிரவு விஷ வாயு கசிந்தது. இதில் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். விஷ வாயு கசிந்தத்தற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் எத்தகைய வாயு கசிவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பது தெரிய வரும். இந்த நிகழ்வு மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

சட்டவிரோதமான சுரங்க நடவடிக்கைகள் காரணமாக இந்த விஷ வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் போக்ஸ்பர்க்கில் பெட்ரோலிய வாயு ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 41 பேர் உயிரிழந்தனர். ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதி தங்கம் நிறைந்த பகுதியாக இருப்பதால், இப்பகுதி சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. அங்குள்ளவர்கள் மூடியுள்ள மற்றும் பயன்படுத்தப்படாத சுரங்களுக்குச் சென்று தங்கங்களை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது ஏற்படும் விபத்துகளில் பலரும் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.