ட்ரெண்டிங்

அதிகளவில் கால்நடைகளை வாங்கிய வெளிமாநில வியாபாரிகள்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் கெடுப்பிடி இல்லாததால் கால்நடைச் சந்தையில் ரூபாய் 7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஓமலூர் அருகே பெருமாள்கோயில் அருகே நடைபெற்ற கால்நடைச் சந்தைக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து எருமைகள், கறவை மாடுகள், கன்றுகள், காளைகள் என 2,500- க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். 

கறவை மாடுகள் ரூபாய் 45,000 முதல் ரூபாய் 80,000 வரையிலும், காளைகள் ரூபாய் 50,000 முதல் ரூபாய் 1,50,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. இளம் கன்றுகள், இறைச்சி மாடுகள் ரூபாய் 20,000 முதல் ரூபாய் 50,000 வரையிலும் விற்பனையாகியுள்ளன. 

கடந்த இரண்டு வாரங்களாகத் தேர்தல் பறக்கும் படையினர் சந்தையில் சோதனை செய்யவில்லை. அதனால் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர். வழியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்பதால் வியாபாரிகள் ரொக்கமாகக் கொண்டு வராமல் டோக்கன் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு, மீத தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினர்.