ட்ரெண்டிங்

புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!

 

ஓமலூர் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை இடித்து, புதிய நீர்த்தேக்கம் தொட்டிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளைக்குட்டை ஊராட்சியில் உள்ள அருந்ததியர் தெருவில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஆதிதிராவிடர் காலனியில் அமைந்திருந்த நீர்த்தேக்கத் தொட்டியும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தனர்.  

 

இந்த இரண்டு நீர்த்தேக்கத் தொட்டிகளும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது குறித்து செய்திகள் வெளியானது. இந்த நிலையில், புதிய நீர்த்தேக்க தொட்டிகளை அமைக்க ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாசலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

தற்போது அருந்ததியர் தெருவில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் ஆதிதிராவிடர் காலனியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டு பணிகளை தொடங்கப்பட்டுள்ளது.