ட்ரெண்டிங்

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு...!

 

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டை நிர்வாக வசதிக்காக ஆத்தூர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு ஏற்காட்டை ஆத்தூர் உடன் இணைக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவி வருகிறது. இதனால் ஏற்காடு பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுதியது.

 

இதைத் தொடர்ந்து, ஏற்காட்டில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் ஒன்றுக்கூடி ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் ஏற்காட்டை ஆத்தூர் உடன் இணைக்கக் கூடாது; சேலம் மாவட்டத்தில் இருந்து ஏற்காட்டைப் பிரிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு மனு ஒன்றை வழங்கினர்.

 

ஒருவேளை ஏற்காடு ஆத்தூர் உடன் இணைக்கப்பட்டால் ஏற்காடு வாழ் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கூறுகையில் "ஏற்காட்டை பிரிப்பது குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை; எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை" தெரிவித்தார். பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.