ட்ரெண்டிங்

மாணவர்கள் மத்தியில் பகிரங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட எம்.எல்.ஏ.!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜன.24) பள்ளியின் தலைமையாசிரியர் அருளானந்தம் தலைமையில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில், பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் அருள் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையே, அங்கு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராஜி, தி.மு.க.வைச் சேர்ந்த தங்களைப் பேச விடாமல் தடுத்ததை ஏற்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

 

அதைத் தொடர்ந்து, அருள் எம்.எல்.ஏ., நீங்களே பேசுங்கள் என்று கூறினார். அது எப்படி எங்களை பேசவிடாமல் நீங்கள் பேசலாம்; அனுமதி பெற்று தான் நாங்கள் பேச வேண்டுமா? என்று தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து வாக்குவாதம் நடந்த நிலையில், எம்.எல்.ஏ. அருள் இங்கு நடந்ததை அனைத்திற்கும் மாணவ, மாணவிகளிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். 

 

என்னை மன்னித்துவிடுங்கள் என்று மாணவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.