ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு பண்டிகை- மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்! 

 

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு பண்டிகை, காவிரி கரையோரப் பகுதிகளில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், காவிரி ஆற்றைப் போல், அனைவரது வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் செழிக்க வேண்டும் என்பதாக காவிரி ஆற்றில் படையலிட்டு மக்கள் வழிபட்டு, ஆற்றில் இறங்கி புனித நீராடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். 

திருமணமான புதுமண தம்பதிகள், காவிரியில் புனித நீராடி, புத்தாடைகளை அணிந்து, கோயில்களுக்கு சென்று வழிபட்டு செல்வார்கள். 


அந்த வகையில், நாளை (ஆகஸ்ட் 03) ஆடிப் பெருக்கு பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான மேட்டூர் அணைக்கு, அண்டை மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வருகைத் தருவார்கள் என்பதால், சேலம் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

அதன்படி, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை டி.எஸ்.பி. தலைமையில் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் நகராட்சி சார்பில் தற்காலிக கழிவறைகள் மற்றும் உடைகள் மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நீராட உள்ள படித்துறையில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு பண்டிகைக்கான பாதுகாப்புப் பணியில் சுமார் 200 ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர்கள், கல்லூரியைச் சேர்ந்த என்எஸ்எஸ் மாணவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

ஆடிப்பெருக்கையொட்டி, நாளை (ஆகஸ்ட் 03) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.