ட்ரெண்டிங்

பனிப்பொழிவால் குண்டுமல்லி மகசூல் சரிவு!

 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் உள்ள பள்ளிதெருப்பட்டி, பெரமனூர், வாழக்குட்பட்டப்பட்டி, காளியாகோவில் புத்தூர், கோம்பைக்காடு உள்ளிட்ட இடங்களில் பல ஆயிரம் ஏக்கரில் குண்டுமல்லி நடவுச் செய்யப்பட்டுள்ளது.  

 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நள்ளிரவில் பெய்த கடும் பனிப்பொழிவால், குண்டுமல்லி உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகலில் வெயில் இல்லாமல் இரவில் பனிக்கொட்டுவதால் அரும்புகள் கருகி, மொக்கு உற்பத்தித் தடுக்கப்படுகிறது.

 

நிலவும் பருவ நிலையால் குண்டுமல்லி செடியில் நோய் தாக்கமும் காணப்படுகிறது. 10 கிலோ மகசூல் தந்த வயலில் தற்போது ஒரு கிலோ குண்டுமல்லி மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

 

இங்கு சாக்குபடி செய்யப்படும் குண்டுமல்லி, சேலம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சேலத்தில் உள்ள கடைகளில் குண்டுமல்லி கிலோ 800 ரூபாய் முதல் 1,000 வரை விற்பனையாகிறது. எனினும், தொடர்ந்து பனிப்பொழிவு நீடிக்கும் பட்சத்தில் குண்டுமல்லி விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தை, மாசி மாதங்களில்குண்டுமல்லி மகசூல் எடுக்க, செடிகளைக் கவாத்து செய்து பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.