ட்ரெண்டிங்

பணிக்கு சென்று வரும் இளைஞர்கள் மீது தாக்குதல்!

 

சேலம் பணிக்கு சென்று வரும் இளைஞர்கள் மீது சமூக விரோதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, பொதுமக்கள், சி.பி.எம். கட்சியினர் தாதகாப்பட்டி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாநகரம், தாதகாப்பட்டி அருகில் உள்ள மூணாங்கரடு பகுதியில் உள்ள இளைஞர்களைத் தொடர்ந்து அப்பகுதியில் சமூக விரோதமாக செயல்களில் ஈடுபட்டு வரும் மணிமாறன், அருள் உள்ளிட்ட 4- க்கும் மேற்பட்டோர் மிரட்டுவது, அடிப்பது உள்ளிட்டச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடைச செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களைத் தாக்கி வருவது வாடிக்கையாக வந்துள்ளது.

 

குறிப்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த டிச. 30- ஆம் தேதி இந்திய வாலிபர் சங்க நிர்வாகிகள் 2 பேர் இதே நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

படுகாயமடைந்த அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

 

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். 

 

எனினும், தொடர்ச்சியாக டிச. 31- ஆம் தேதி சதீஷ் என்ற வாலிபர் சங்க நிர்வாகியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள இருவரையும் வீட்டிற்கு வர சொல்ல வேண்டும் எந்த புகாரும் தங்கள் மீது கொடுக்க கூடாது என மிரட்டி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

இதனால் கோபப்பட்ட இப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சாலை மறியல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.