ஆன்மிகம்

மாட்டுச் சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு மேல் வர்த்தகம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் பெருமாள்கோவில் மாட்டுச் சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற பெருமாள்கோவில் மாட்டுச் சந்தை, ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.

அதேபோல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வெளிமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பசுக்களும், காளைகளும், காளைக்கன்றுகளும் அதிகமாக விற்பனையாகின. இதில், காராம் பசுக்கள் 40,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரையிலும், இளம் கன்றுகள் 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், நாட்டு இன மாடுகள் 60,000 ரூபாய்க்கும், காளைகள் 55,000 ரூபாயில் இருந்து 70,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைவிட வரும் வாரத்தில் கால்நடைகளின் விற்பனை அதிகளவில் இருக்கும் என்றும் வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.