ஆன்மிகம்

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, தயாரிக்கப்படும் 50,000 லட்டுகள்!

வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைணவ கோயில்களில் நாளை (டிச.23) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறக்கப்படும்.

பெருமாளுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின் அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்படவுள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவர் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம், பட்டைக்கோவிலில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 50,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

லட்டுகளைத் தயாரிக்கும் பணியில் 100- க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். மேலும், வெங்கடாஜலபதிக்கு சூட்டுவதற்காக, 200 கிலோ வண்ண மலர்களைக் கொண்டு மாலையாகத் தொடுக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் வளாகம், கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கிறது.