ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சுகாதாரப் பேரவைக் கூட்டம்!

 

சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச.15) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்து விதமான மருத்துவச் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 3- வது சுற்று சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஓர் செயல்பாடாக ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் சுகாதாரப் பேரவை நடைபெற்று வருகின்றது. 2021- 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சேலம், புதுக்கோட்டை கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் முதல் சுற்றாக 2021-2022 ஆம் ஆண்டு மாவட்ட சுகாதாரப் பேரவை கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12- ஆம் தேதி நடைபெற்றது. இப்பேரவையில் மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், அனைத்துத் துறை அலுவலர்களும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும், தன்னார்வலர் தொண்டு நிறுவனர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஒருங்கிணைப்புக்குழு பரிசீலித்து எடுக்கப்பட்ட 17 சுகாதார திட்ட அறிக்கைகள் மாநில சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேபோன்று. இவ்வாண்டில் வட்டார சுகாதாரப் பேரவையில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் வட்டார மருத்துவர்கள் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், இணை இயக்குநர், துணை இயக்குநர்கள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. திட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, கடந்த மார்ச் 08- ஆம் தேதி அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான 2- வது சுற்று சுகாதாரப் பேரவையில் 68 திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மாநில சுகாதார பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற 3- வது சுற்று சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் பல்வேறு திட்ட அறிக்கைகள் ஆராயப்பட்டு, மாநில சுகாதாரப் பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு, சேலம் மாவட்ட பொதுமக்களின் நலன் மேம்படத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.