ட்ரெண்டிங்

சென்னை சென்ட்ரல்- கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்!

 

சபரிமலை சீசனைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல்- கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல்- கோட்டயம், கோட்டயம்- சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். வரும் டிசம்பர் 15, 17, 22, 24 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்திற்கும், டிசம்பர் 16, 18, 23, 25 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

 

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது.

 

சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 04.30 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், மாலை 04.15 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், கோட்டயத்தில் இருந்து அதிகாலை 04.40 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், மாலை 05.15 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.