ட்ரெண்டிங்

சேலம் புத்தகத் திருவிழா டிச.06- வரை நீட்டிப்பு!

 

சேலம் புத்தகத் திருவிழா இன்றுடன் (டிச.03) நிறைவடையவிருந்த நிலையில், வரும் டிசம்பர் 06- ஆம் தேதி நீட்டிப்புச் செய்யப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

சேலம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் புத்தகத் திருவிழா 2023, கடந்த நவம்பர் 21- ஆம் தேதி அன்று தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவிற்கு அனைவரும் வருகை தரும் வகையில், சிறப்பு பேருந்துகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதேபோல், நாள்தோறும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தங்களது ஆசிரியர்களுடன் புத்தகத் திருவிழாவிற்கு வந்து வேண்டிய புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவி, மாணவிகளும் புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்து, புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

டிசம்பர் 01- ஆம் தேதி வரை சேலம் புத்தகத் திருவிழாவிற்கு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 20,983 பேர் வருகைத் தந்துள்ளனர். சுமார் 1.21 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சேலம் புத்தகத் திருவிழா 2023 இன்றுடன் (டிச.03) நிறைவடைந்த நிலையில், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று, வரும் டிசம்பர் 06- ஆம் தேதி வரை சேலம் புத்தகத் திருவிழா 2023 நீட்டிப்பு செய்யப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.