ட்ரெண்டிங்

கல்விக் கடன் விண்ணப்பத்தினை எந்த ஒரு வங்கிக் கிளைகளாலும் நிராகரிக்க முடியாது- மாவட்ட ஆட்சி

சேலம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 15- ஆம் தேதி அன்று கல்விக்கடன் மேளா நடைபெறவுள்ளதையொட்டி வித்யா லட்சுமி இணையதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (அக்.09) நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்ததாவது, "சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்கு ஏதுவாக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் வித்யா லட்சுமி" என்ற இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரிகளுக்குத் தலா இரண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

 

இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரியில் வங்கிக் கடன் வேண்டி விண்ணப்பிக்க விருப்பமுடைய மாணவர்களுக்கு "வித்யா லட்சுமி* இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். கல்விக் கடன் விண்ணப்பங்களை நிரப்பும்போதுதான் இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்படும். இதற்கென சிறு. குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வனங்காமுடியை இந்நிகழ்விற்கு அழைத்துவந்து இப்பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது அனைத்து சந்தேகங்களையும் இப்பயிற்சியில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

 

இன்றைய தினம் முதல் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீது தீர்வு கண்டு வங்கியாளர்கள் வருகின்ற அக்டோபர் 15- ஆம் தேதி அன்று இதே சோனா கல்லூரியில் நடைபெறும் கல்விக் கடன் மேளாவில் மாணவர்களுக்கான கல்விக் கடன்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, "வித்யா லட்சுமி" இணையதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதியான கல்விக் கடன் விண்ணப்பத்தினை எந்த ஒரு வங்கிக் கிளைகளாலும் நிராகரிக்க முடியாது என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும், அக்டோபர் 15- ஆம் தேதி அன்று சோனா கல்லூரியில் நடைபெறவுள்ள கல்விக் கடன் மேளா குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ட்விட்டர். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாகச் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். கல்விக் கடன் தேவைப்படும், எந்த ஒரு மாணவரும் விடுபடாத வகையில் கல்லூரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், தனி வருவாய் அலுவலர் கீதாபிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வனங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.