ட்ரெண்டிங்

தொழில்முனைவோர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தயார்- ஆட்சியர் கார்மேகம் தகவல்!

 

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி 07, 08 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று (நவ.29) காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "சென்னையில் வருகின்ற ஜனவரி 07, 08 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

 

குறிப்பாக, ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் வளர்ச்சியோடு தொழில் வளர்ச்சிக்கும் முதன்மையான பங்கு உண்டு. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதாரத்தை வலிமை கொண்டதாக மாற்றுகிறது. அதிக பட்ச திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

 

இத்தகைய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் NEEDS, UYEGP, ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS, PMEGP மற்றும் PVFME போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தாட்கோ, மகளிர் திட்டம். வாழ்ந்து காட்டுவோம் திட்டங்கள் மூலமாகவும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இத்திட்டங்களின் மூலமாக தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இத்தகைய சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் தொழில்முனைவோர் ஆக வேண்டும்.

 

தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான ஒப்புதல்கள், தடையின்மைச் சான்றுகள், புதுப்பித்தல் போன்றவற்றை எளிதாகப் பெற ஒரு ஒற்றைச் சாளர தீர்வுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிடப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும். மேலும், இதனைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், செய்திட மாவட்ட நிர்வாகம் எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே, தொழில்முனைவோர் சேலம் மாவட்டத்தில் மென்மேலும் முதலீடு செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.