தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் (வயது 30)- செண்பகவள்ளி (வயது 25). இந்த தம்பதிக்கு ஏழரை வயதில் ரசிகா என்ற மகளும், நான்கரை வயதில் தீரன், இரண்டரை வயதில் ஆதி வருண் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
இந்த தம்பதி திருச்சி மாவட்டத்தில் குடிபெயர்ந்து, அங்கேயே தள்ளுவண்டியில் சிப்ஸ் கடையை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், நேற்று மதியம் 02.00 மணியளவில் தனது குழந்தைகள் மற்றும் மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, திருச்சியில் இருந்து சேலம் வழியாக பென்னாகரத்துக்கு மணிகண்டன் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, மாலை 06.00 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், செண்பகவள்ளி தூக்கி வீசப்பட்ட நிலையில், அந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி, கணவன் முன்னே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துச் சென்று, உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


-SXgDfGgJfO.jpg)