ட்ரெண்டிங்

வாழை மரங்களைப் பாதுகாக்கத் தோட்டக்கலைத்துறை புதிய யோசனை!

 

வாழை மரங்கள் சேதமடையாமல் இருக்க தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு புதிய யோசனையை வழங்கியுள்ளது.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கருப்பூர், வெள்ளாளப்பட்டி, சக்கரைச்செட்டிபட்டியில் 1,000- க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு வாழை, பூவன், ரஸ்தாளி, செவ்வாழை என பல்வேறு வாழை ரகங்கள் இங்கு விளைகின்றன.

 

ஆனால் அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக, வாழை மரங்கள் கடுமையாக சேதமடைவதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவுச் செய்தும், பருவமழை காலத்தில் அவர்களை இழப்பை எதிர்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில், சூறைக்காற்றில் இருந்து வாழை மரங்களைப் பாதுகாக்க, ஓமலூர் தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதன்படி, மரங்கள் பாதிக்காத வகையில், அதன் நான்கு புறமும், பிளாஸ்டிக் கயிறுகளைக் கட்டி வைக்கலாம் என்றும், பிறகு நிலத்தில் ஒரு சிறிய கம்பினை நட்டு அதில் கயிறுகளை இணைப்பதன் மூலம் வாழை மரங்கள் உடையாமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 

இதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும் என்றும் விளக்கியுள்ள தோட்டக்கலைத்துறை, ஒருமுறை பயன்படுத்திய கயிறுகளையே, அடுத்த சாகுபடிக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஓமலூர் தோட்டக்கலைத்துறையின் இந்த ஆலோசனைக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் ஆதரவுக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.