ட்ரெண்டிங்

சேலத்துக்கு 158 வயது-மாங்கனி மாவட்டம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

 

இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமை பெற்ற சேலம் மாவட்டம்,கடந்த 1792- ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 1866- ஆம் ஆண்டு நவம்பர் 01- ஆம் தேதி சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே சேலம் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், கடந்த 1994- ஆம் ஆண்டு ஜூன் 01- ஆம் தேதி அன்று சேலம் நகராட்சி, மாநகராட்சியாக  மாற்றப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற வழிபாட்டு தலங்கள் ஏராளம் உண்டு. அதன்படி, சேலம் சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை அழகிரிநாதர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், திப்பு சுல்தான் கட்டிய ஜமா மஸ்ஜித், குழந்தை ஏசு பேராலயம், அயோத்தியபட்டிணம் ராமர் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோயில், சேலம் 1008 சிவலிங்கம் கோயில் என பட்டியல் நீளும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மதுவிலக்கு கடந்த 1937- ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் தான் அமல்படுத்தப்பட்டது. சேலம் ரயில்வே ஜங்சன் நடைமேடை தான் இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடை ஆகும். சேலம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறி, வெள்ளி கொலுசுகள் உற்பத்தி, ஜவ்வரிசி உற்பத்தி ஆகும்.

இந்த மாவட்டத்தில் இருந்து பட்டு வேட்டிகள், பட்டு சேலைகள், பூக்கள், மாம்பழங்கள், தேங்காய் நார் கயிறுகள் அதிகளவில் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. சுற்றுலாத் தலங்களைப் பொறுத்த வரை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை,ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகும்.

சேலம் ஏற்காடு செல்லும் சாலையில் கடந்த 1935- ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய சுந்தரம் முதலியார், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் 150- க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இவர் தயாரித்த அலிபாவும் நாற்பது திருடர்களும் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை அடையாளம் காட்டியதுடன், முதலமைச்சர் என்ற உச்சத்திற்கு செல்லக் காரணமான இருந்தது மாடர்ன் தியேட்டர் நிறுவனம் என்றால் மிகையாகாது.

தமிழகத்திற்கு மூன்று முதலமைச்சர்களை தந்த மாவட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது சேலம் மாவட்டம். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பராயன் கடந்த 1926- ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதலமைச்சராகவும், பின்னர், ராஜாஜி, எடப்பாடி பழனிசாமி என மூன்று முதலமைச்சர்களை தமிழகத்துக்கு வழங்கிய பெருமை சேலத்துக்கு உண்டு.

சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாம்பழம் தான். எனவே இதற்கு மாங்கனி மாநகரம் என்ற பெயரும் உண்டு. தற்போது, சேலத்தில் இரும்பு உருக்காலை அமைந்துள்ளதால் ஸ்டீல் சிட்டி என்றும் அழைப்பார்கள். சேலம் மாவட்டத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மற்ற மாவட்டங்களை போல் இல்லாமல், எப்போதும் குறைந்த அளவு வெயில் மற்றும் மழை,குளிர் என ஒன்று சேர இதமான சூழலையும், அனைத்து தரப்பினரும்,மிக சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதுவான மாவட்டம் சேலம்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட சேலம் மாவட்டம், இன்று (நவ.01) தனது 158- வது பிறந்தநாளைக் கொண்டாடி  வருகிறது.