ட்ரெண்டிங்

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளைத் திறந்து வைத்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்!

 

சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்தின் 6-வது வார்டில் உள்ள முல்லை நகர் பகுதியில் 2022- 2023 ஆம் ஆண்டு மாநில நிதி குழு மானியத்திலிருந்து ரூபாய் 43.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டதை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. ஆகியோர் இன்று (அக்.25) திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

 

15- வது மத்திய நிதி குழு நிதியின் கீழ் ரூபாய் 31.60 லட்சம் மதிப்பீட்டில் 1,212 மீட்டர் நீளத்திற்கு வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டனர். மேலும் முல்லை நகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீர் நீரோடை செல்ல 650 மீட்டர் நீளத்திற்கு வடிகால் அமைக்க மொத்த செலவையும், பொன்குரு மெயின்ஸ் உரிமையாளர் சுந்தராஜன் ஏற்றுக்கொண்டதை அடுத்து மாநகராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது, "பல வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தில் ஓடை இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் வயல்களில் நிரம்பி வந்தது. குடியிருப்புகள் அதிகமானதால் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த பிரச்சனைக்கு தீர்வுகான பல முயற்சி செய்தும் நமது முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஆட்சியில் தான் தீர்வு கிடைத்துள்ளது.

 

பள்ளம் வெட்டி பள்ளத்திலிருந்து மோட்டர் மூலம் ஓடையில் மழைநீர் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டவுள்ளது. பொன்குரு மெயின்ஸ் உரிமையாளர் சுந்தரராஜன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தனது சொந்த நிலத்தில் வடிகால் அமைக்க இடம் கொடுத்து அதற்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். மாநகராட்சி மற்றும் பொதுமக்களாகிய நாம் அனைவரும் அவருக்கு கடமைபட்டு இருக்கிறோம். முல்லை நகர் பகுதியில் புதியதாக சாலை அமைக்க ரூபாய் 43.50 லட்சமும், மழைநீர் வடிகால் அமைக்க ரூபாய் 31.60 லட்சமும் என மொத்தம் ரூபாய் 75.10 லட்சமும், இதன் மூலம் முல்லை நகர் பொதுமக்கள் மனநிறைவுடன் இருப்பதை நான் உணர்கிறேன்.

 

மேலும் இப்பணிகளுக்கு வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனின் முயற்சி மிக முக்கியமானதாகும். சுந்தரராஜனை நேரடியாகச் சந்தித்து அவருடைய நிலத்தில் மழைநீர் வடிகால் வாங்கி தந்தார் என்பதையும் இங்கு நினைவு கூறுகிறேன். தற்போது உள்ள ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., சிறப்பாக செயல்பட கூடியவர், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதனை உடனடியாக செய்து போதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று முனைப்புடன் இருப்பவர் தான் ஆணையாளர். எனவே இந்த நேரத்தில் மாநகராட்சி ஆணையாளர், அதிகாரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.