ட்ரெண்டிங்

மாபெரும் கல்விக் கடன் மேளா....அக்.09-ல் சோனா கல்லூரியில் விண்ணப்பிக்கும் பயிற்சி- மாவட்ட ஆட்சிய

சேலம் மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தலைமையில் நேற்று (அக்டோபர் 06) நடைபெற்றது. 

 

இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 10- ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்பதற்கும்,12- ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது,

மேலும், மேற்குறிப்பிடப்பட்ட கல்விக் கடன்களை பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம்.

 

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் பிரத்தியோகமாக வித்யா லட்சுமி" என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாபெரும் கல்விக் கடன் மேளாவிற்கென அனைத்து கல்லூரிகளிலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இரண்டு மாணவர்கள் நியமிக்கப்பட்டு. கல்விக் கடன் வழங்குவதற்கு வித்யா லட்சுமி இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்த பயிற்சி வருகின்ற அக்டோபர் 09- ஆம் தேதி அன்று சோனா கல்லூரி நடைபெறவுள்ளது.

 

மேலும், இப்பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள் தங்கள் கல்லூரிகளுக்கு சென்று இணைதளத்தில் கல்வி கடன் குறித்து விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக பிற மாணவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். சேலம் மாவட்டத்தில், ஏற்கனவே கல்விக்கடன் தொடர்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் தற்பொழுது இணைதளத்தில் புதியதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தொடர்பான விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அக்டோபர் 15- ஆம் தேதி அன்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் கல்விக்கடன் மேளாவில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி கிளை மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

 

எனவே, சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் வேண்டி வங்கிகளில் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாபெரும் கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பாக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

 

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ இ.ஆ.ப., தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதாபிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.